அகர்தலா:

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தெப் எப்பவும் சர்ச்சை பேச்சுகளுக்கு புகழ்பெற்றவர். இந்த முறை உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட டயானா ஷேடனை குறிவைத்துள்ளார்.

கைத்தறி பொருட்கள் வடிவமைப்பு கருத்தரங்கை தொடங்கி வைத்த பிப்லாப் குமார் பேசுகையில், ‘‘1997ம் ஆண்டு டயானா ஹேடன் உலகி அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அந்த பட்டத்திற்கு தகுதியற்றவர். இந்திய சந்தையை குறிவைத்து சர்வதேச அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு நிகழ்வு இது.

டயானா எந்த வகையில் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலித்தார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஐஸ்வர்யா ராய் இன்னும் இந்திய அழகியாக திகழ்கிறார். பெண் தெய்வங்களான லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் தான் உண்மையான அழகிகள்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இந்திய பெண்கள் பொடுகை ஒழிக்க ஷாம்புகளுக்கு பதிலாக உள்ளூரில் உள்ள இலைகளை பயன்படுத்தி வந்தனர். இந்திய பெண்கள் அழகி போட்டிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வாய்ப்பை உலக அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகாக பயன்படுத்திக் கொண்டுள்ளன.

இதனால் இந்திய பெண்கள் இலைகளை பயன்படுத்தாமல் தற்போது பியூட்டி பார்லர்களையும், அழகு சாதன பொருட்களை சார்ந்துள்ளனர்’’ என்றார்.