அகர்தலா
திரிபுராவில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டசபை உறுப்பினர்களில் பலர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
நடந்து முடிந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக 35 உறுப்பினர்களை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த உறுப்பினர்கள் வேட்பு மனுவை ஆராய்ந்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தலின் போது வேட்பு மனுவுடன் வேட்பாளர்கள் அறிவித்துள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பாஜக வின் 35 உறுப்பினர்களில் 10 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 8 பேர் மீது கொலை போன்ற தீவிர குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன. இது சுமார் 29% ஆகும். இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6% பேரும், திருபுரா மக்கள் முன்னணியில் 13% பேரும் குற்றப் பின்னணி உடையவர்கள் ஆவார்கள். கடந்த 2013 ஆம் வருடம் வெறும் ஆறு பேர் மட்டுமே குற்றப் பின்னணி உடையவர்களாக இருந்துள்ளனர். அது இப்பொழுது இருமடங்காகி 12 ஆகி உள்ளது.
இதே போல தற்போது 15 கோடீஸ்வர சட்டசபை உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 13 பேர் பாஜகவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவரும்,திருபுரா மக்கள் முன்னணியில் ஒருவரும் உள்ளனர். அதிக சொத்துள்ள மூன்று சட்டசபை உறுப்பினர்கள் பாஜகவில் உள்ளனர்.