கொல்கத்தா: “பாரதீய ஜனதாவிடமிருந்து பாதுகாப்பாய் இருப்பதாய் உங்களைக் குறிப்பிடுங்கள்” என்ற பெயரிலான ஒரு ஆன்லைன் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது மேற்குவங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், தனக்கு கடும் போட்டியாக உள்ள பாரதீய ஜனதாவை எதிர்த்து இத்தகையப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது அக்கட்சி. இந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான போட்டி, சட்டசபைத் தேர்தலில் கடுமையாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
savebengalfrombjp.com என்ற பெயரில் துவக்கப்பட்டுள்ள ஒரு வலைதளத்திற்குச் சென்று, பதிவுசெய்துகொண்டு, தாங்கள் பாரதீய ஜனதாவிடமிருந்து பாதுகாப்பாய் உள்ளதாக குறிப்பிட வேண்டும்.
இதுவரை, இந்த வலைதளத்திற்கு சென்று மொத்தம் 2,89,784 பேர் பதிவுசெய்துகொண்டு, அவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் என்று திரிணாமுல் கட்சியின் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஐடியா, அக்கட்சிக்கு தேர்தல் வியூக ஆலோசகராய் செயல்படும் பிரஷாந்த் கிஷோரினுடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.