கொல்கத்தா :
திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மிஹிர் கோஸ்வாமி, மே.வங்க மாநிலத்தில் உள்ள கூச்பெகர் தக்ஷின் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வீயூகங்களை வகுக்கும் பொறுப்பு பிரஷாந்த் கிஷோரின் ‘ஐ பேக்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கட்சி விவகாரங்களில் ‘ஐ பேக்’ தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஸ்வாமி, திரினாமூல் காங்கிரஸ் கட்சியில், தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அண்மையில் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “திரினாமூல் காங்கிரஸ் கட்சி, தலைவர் மம்தா பானர்ஜியின் கைகளில் இல்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.
“கட்சி பொறுப்புகளில் இருந்து தான் விலகிய பின் விளக்கம் கேட்டு கட்சியின் மேலிடத்தில் இருந்து எந்த நோட்டீசும் வரவில்லை” என தெரிவித்துள்ள கோஸ்வாமி ” கடந்த ஆறு வாரங்களாக மம்தா பானர்ஜி தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திரினாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் இரண்டொரு நாட்களில் நீக்கப்படுவார் என கொல்கத்தவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோஸ்வாமி, திரினாமூல் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் (1996) அந்த கட்சியில் இருந்து வருகிறார்.
– பா. பாரதி