திருச்சி,
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் தமிழக சிபிசிஐடி பிரிவினரின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த ஆண்டு நவம்பர் 7ந்தேதி வழக்கு சிபிஐக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டருந்தது.
அதைத்தொடர்ந்து, திருச்சி வந்த சிபிஐ அதிகாரிகள், வழக்கு குறித்து, ராமஜெயம் உடல் கிடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், நேரு எம்.எல்.ஏ, ராமஜெயத்தின் மனைவி லதா ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்ட னர். இதன் காரணமாக வழக்கின் விசாரணை மேலும் சூடுபிடித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொடுரமான முறை யில் கொலை செய்யப்பட்டார். கொலை நடைபெற்று 5 ஆண்டுகள் முடிந்தும் குற்றவாளிகள் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. அதனால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் ஒவ்வொரு முறை விசாரணையின்போது சிபிசிஐடி போலீசார் கால அவகாசம் கேட்டு வழக்கை இழுத்தடித்து வந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ந்தேதி நடைபெற்ற விசாரணை யின்போது, வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்த தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து வழக்கு மீண்டும் நவம்பர் 7ந்தேதி விசாரணைக்கு வந்தது. . அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார்.
மேலும் 3 மாதத்தில் வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிஐக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
அதைத்தொடர்ந்த வழக்கு குறித்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சியில், ராமஜெயம் கொலை நடந்த பகுதி மற்றும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ராமஜெயத்தின் மனைவி உள்பட பலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.