அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில், லால்குடி, திருச்சி மாவட்டம்
தாரகாசூரனின் தொல்லை தாங்காமல் சிவனிடம் முறையிட்டார்கள் தேவர்கள். சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார். அதன்பொருட்டுதான் சூரனை அழிக்க முருகன் பிறந்தான்.
அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர். அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம்பாலகனான முருகனைக் கொண்டுவந்து அந்த ஏழு குடில் பகுதியில் போட்டார். ரிஷிபத்தினிகள் அதிசயமாய் அக்குழந்தையைப் பார்த்தனர். பாலகுமாரன் லேசாய் அழத்துவங்கினான். ஏழு பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர். குழந்தைக்குப் பசி ஏற்பட அழுகை அதிகரித்தது. ரிஷி பத்தினிகள் பால் தர மறுத்தார்கள்.
அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள், தூக்கி பரிவோடு தாலாட்டி பாலூட்டினார்கள். வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர். சிவனின் வாரிசுக்கு பால் கொடுத்தால் எவ்வளவு பாக்கியம். காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே. அந்த நல்ல வாய்ப்பை கெடுத்து, அந்த புகழைக் கார்த்திகை பெண்களுக்கு கொடுத்து விட்டீர்களே என்று சினந்தார்கள். மனைவியரை அடித்து விரட்டினர். முருகப்பெருமான் தன் அவதார காரணத்தை உணர்ந்தார்.
தாரகாசூரனைக் கொன்றுபோட்டு, வெற்றி வீரராய் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது, சப்த ரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு வெகுண்டார். அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் தீராத சாபமிட்டுச் சென்றார் முருகன். முனிவர்கள் நடுங்கினார்கள். குற்றம் செய்ததை அறிந்து, நேராகத் திருவையாறு சென்று, சிவனை வணங்கித் தவம் செய்தனர். பலன் கிடைக்கவில்லை. பிறகு லால்குடி (திருவத்துறை) வந்து, சிவனை நினைத்துக் கடும் தவம் புரிந்தனர்.
கோபத்தில் மனைவியரை விரட்டிய பாவத்திற்கு பிராயச்சித்தம் தந்து, தங்களை ஆட்கொள்ளுமாறு தவமிருந்தனர். சுயம்புலிங்கமான சிவன், முனிவர்கள் தவத்தினை ஏற்று, அவர்களுக்கு சாப விமோசனம் தந்தார். தன் தலைப்பகுதி வெடிக்க அதிலே தீயினை உண்டாக்கினார்
லிங்கமூர்த்தி. அந்தத் தீப்பிழம்புகள் ஏழு முனிவர்களையும் உள்வாங்கிக் கொண்டது. இன்றும் லால்குடி சிவலிங்கத்தின் மேல்பகுதியில் வரிவரியாய் பள்ளம் இருப்பதைக் காணலாம். சிவனின் முழு அருளுக்கும் உரியவர்களாக ஏழு முனிவர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், இறைவனின் பெயர் அன்று முதல் “சப்தரிஷிஸ்வரர்” என்று வழங்கப்பட்டது.
நுழைவாயில்அருகே ஏழு ரிஷிகளும் அருள் பாலிப்பதை நாம் இன்றும் காணலாம்.
திருவிழா:
மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை.
வேண்டுகோள்:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வழிகாட்டி:
லால்குடி திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் பாதையில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது