திருச்சி மாவட்டம் , மணக்கால, கவுமாரி (சப்தமாதர்) ஆலயம்.
செட்டியப்பர், ஒரு மலையாள மந்திரவாதி. இவர் மந்திரவாதியானாலும் தனது மந்திரத்தை எவருக்கு எதிராகவும் பயன்படுத்தியது இல்லை. வியாபாரம் செய்வதையே பிரதான தொழிலாகச் செய்து வந்தார் அவர்.
அதிலும் குறிப்பாக மஞ்சள் வியாபாரம். ஒரு சமயம் வியாபார விஷயமாக மணக்கால் வந்தார். வழியில் ஒரு ஆலயம் இருந்தது. அதன் எதிரே இருந்த திருக்குளத்தில் ஏழு கன்னியர் குளித்துக் கொண்டிருந்தனர்.
பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, ருத்ரணி, கௌமாரி, சாமுண்டி, ஆகிய சப்த மாதர்கள் தாம் அவர்கள். குளக்கரையை நெருங்கிய வியாபாரி கரையோரம் நின்று அவர்கள் நீராடுவதைப் பார்த்தார்.
தெய்வீக அழகு நிரம்பி அவர்களிடம், மஞ்சள் வேணுமா? என்று கேட்டார். விளையாடியபடியே நீராடிக் கொண்டிருந்த கன்னியர், வேண்டாம் என்றனர்.
செட்டியப்பருக்கு, மஞ்சள் வியாபாரமாகவில்லையே என்ற வருத்தத்தைவிட, தேவகன்னியர் போல் தோற்றமளித்த அவர்களிடம் தன் வர்த்தகம் நடக்கவில்லையே என்ற வருத்தம் மேலிட்டது. அந்தப் பெண்களை மிரட்டியாவது கொஞ்சம் மஞ்சள் வாங்க வைக்க வேண்டும் என்று எண்ணினார்.
எனவே, கரையில் அவர்கள் கழற்றி வைத்திருந்த ஆபரணங்களையும், ஆடைகளையும் சுருட்ட ஆரம்பித்தார்.
முருகனின் சக்தியான கௌமாரி அதைப் பார்த்துவிட்டாள். உடனே செட்டியப்பரை அழைத்தாள். எனக்கு மஞ்சள் வேண்டும் என்றாள்.
மனம் மகிழ்ந்த செட்டியப்பர், எவ்வளவு வேண்டும் ? ஒரு பணத்துக்கா? இரண்டு பணத்துக்கா? என்று கேட்டார்.
இதோ, இதன் எடைக்கு எடை மஞ்சள் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு போ ! என்ற கௌமாரி, தன் தலையிலிருந்த ஒரு மலரைத் தூக்கி அந்த வியாபாரியை நோக்கி வீசினாள்.
அலட்சியமாக அந்த மலரை எடுத்து தராசின் ஒரு தட்டில் வைத்த செட்டியப்பர், மறு தட்டில் மஞ்சளைப் போட்டார். பூ இருந்த தட்டு கீழே இறங்கியது. மறுபடியும் மஞ்சளைப் போட்டார்.
தட்டு மேலும் கீழே இறங்கியது. என்ன ஆச்சரியம் இது! வியந்த செட்டியப்பர் தான் கொண்டு வந்த மொத்த மஞ்சள் மூட்டைகளையும் தராசுத் தட்டில் வைத்தார்.
ஊஹூம்! பூ இருந்த தட்டு கீழேயே இருந்தது. பூத் தட்டு மேலே வரவேயில்லை. மந்திரவாதியான தன்னிடமே மாயாஜாலம் செய்கிறார்களோ ! யோசித்தார்.
அப்போது ஓர் உண்மை புரியத் தொடங்கியது அவருக்கு. அந்தப் பெண்கள் சாதாரண பெண்கள் அல்ல, தெய்வப் பெண்கள் என உணர்ந்தார்.
உடனே அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அங்கேயே சிறியதொரு கோயிலமைத்து சப்தமாரை வழிபட்டார்.
திருவிழா:
மாசி மாதம் அமாவாசையைத் தொடர்ந்து நடைபெறும் கரகத் திருவிழா இங்கு வெகு பிரசித்தம்.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டு மகிழ்கின்றனர்.
நவராத்திரி 10 நாட்களும் இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 10ம் நாள் நடைபெறும் தயிர்ப் பாவாடை எனும் வழிபாடு வித்தியாசமானது.
தல சிறப்பு:
பொதுவாக சப்தமாதர்கள் ஆலயம் வடக்குத் திசை நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இங்கு ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்திருப்பது சிறப்பு.
பொது தகவல்:
கோயில் பிரகாரத்தில் மதுரை வீரன் சன்னதி, செட்டியப்பர் உருவம், துவார பாலகிகள், கருப்பணன், ஐயனார், யானை குதிரை வாகனங்கள் போன்றவை அமைந்துள்ளன.
பிரார்த்தனை:
இங்குள்ள சப்தமாதரை வணங்கினால் மாங்கல்ய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கடன் வசூலாக, திருமணம் இனிதே நிறைவேற இங்குள்ள கருப்பணசாமியை வணங்குகின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கோயிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறம் மதுரை வீரன் சன்னதி உள்ளது. அதை அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் செட்டியப்பரின் வடிவம் உள்ளது.
அர்த்தமண்டப நுழைவாயிலின் இருபுறமும் பிரமாண்டமான துவார பாலகிகளின் திருமேனிகள் அமைந்துள்ளன.
கருவறையில் சப்தமார்கள் அழகுற அமைந்து திருக்காட்சியளிக்கின்றனர்.
இவர்களை வழிபடுவது மாங்கல்ய பலம் அளித்து, மஞ்சள் குங்குமம் நிலைக்கச் செய்யும் என்பது நம்பிக்கை.
பிராகாரத்தில் யானை சிலையும், குதிரை சிலையும் சுதை வடிவில் காட்சி தருகின்றன. யானையின் மேல் ஐயனாரும் குதிரை மேல் கருப்பண்ணசாமியும் அமர்ந்திருக்கின்றனர்.
வராத கடன் திரும்பிவர கருப்பண்ணசாமிக்கும் அவர் சவாரி செய்யும் குதிரைக்கும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தால் அந்தக் கடன்வசூலாகிவிடும். குடும்ப பிரச்சனைகள் தீரவும், திருமணம் தடையின்றி நடந்தேறவும் இவரை வணங்குகின்றனர்.
தெற்கு பிராகாரத்தில் பிரமாண்டமாக பரந்து விரிந்து வளர்ந்திருக்கும் நருவளி மரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்தால் குழந்தைப் பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். மேற்கு பிராகாரத்தில் அய்யனார் சன்னதியும், எதிரே யானைச் சிலையும் உள்ளன.
சுமார் எண்ணூறு ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வமாக விளங்குகிறது.
நவராத்திரி 10 நாட்களும் இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
10ம் நாள் நடைபெறும் தயிர்ப் பாவாடை எனும் வழிபாடு வித்தியாசமானது. அர்த்தமண்டபம் முழுவதும் தயிர் சாதத்தைக் கொட்டி நிரவி விடுவார்கள்.
பார்க்கும்போது அர்த்தமண்டபம் வெள்ளை வெளேர் மல்லிகை மலர்களால் நிறைக்கப்பட்டது போல் இருக்கும். நிவேதனம் செய்த பின்னர், இந்தத் தயிர் சாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
அமைவிடம்:
திருச்சி – அன்பில் பேருந்து சாலையில், லால்குடியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால் என்ற இந்தத் தலம்.