திருச்சி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திருச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிக்கனியை பறித்தே ஆக வேண்டும் என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜகவின்  நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு, காவல்துறை மூலம் இடைஞ்சல் கொடுத்து வருகிறது. இதையும் சட்டப்படி எதிர்கொண்டு,   பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்களை களமிறக்க மாநில தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி பிரதமர் மோடி 4 நாள் தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருச்சியில் வாகன பேரணி சென்று வாக்கு சேகரிக்க  இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.  திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது ஆனால், திருச்சி காவல்துறை ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது.  போக்குவரத்து நெரிசல் காரணமாக  அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், பொதுவாக சாலைகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் இந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்வதற்காக நட்டா இன்றிரவு திருச்சி வருவது குறிப்பிடத்தக்கது.