பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த பழங்குடியினர் தாங்கள் புதிதாக குடியிருக்கும் மாநிலத்தில் பழங்குடியினர் என்று அறிவிக்கப்படவில்லை என்றால் அந்த மாநிலத்தில் ST அந்தஸ்து கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தர்செம் லால் என்பவர் கடந்த இருபது ஆண்டுகளாக சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் நிரந்தரமாக வசித்துவருகிறார்.
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு வீடு வழங்க சண்டிகர் வீட்டுவசதி வாரியம் சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. விண்ணப்பம் செய்பவர்கள் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் அல்லது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதியில் இருந்து குறைந்தது மூன்று ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.
ஆனால், தர்செம் லால்-க்கு வீடு ஒதுக்கப்படவில்லை, இதனால் மனமுடைந்த அவர், சிவில் நீதிமன்றத்தை நாடியபோது, அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் குடிசை மாற்று வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது,
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 342 (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) பிரிவின் கீழ் பொது அறிவிப்பு செய்யப்பட்ட போதும் ஒரு மாநிலத்தில் அல்லது யூனியன் பிரதேசத்தில் அந்த சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்கவில்லை என்றால் அந்த மாநிலத்தில் ST அந்தஸ்து கோர முடியாது என்று தீர்பளித்துள்ளனர்.