டில்லி

ந்திய பொதுப் பதிவாளர் மாதிரி மக்கள் தொகையை நடத்தி விரைவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.  இதற்குத் தேசிய மக்கள் தொகை பதிவேடு மிகவும் அவசியமாகும்.   தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது இந்திய குடிமக்கள் பட்டியலின் ஒரு பகுதியாகும்.

இந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில் தேசிய இந்திய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை உருவாக்கப்படுகிறது.  இதன் மூலம் இந்திய குடியுரிமை பெறாதவர்கள் கண்டறியப்பட்டு இதன் மூலம் மேற்கண்ட நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் அல்லாதோர் கண்டு பிடிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

இதையொட்டி பல மாநிலங்களில் இந்த பதிவேட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  கடந்த 2019 ஆம் வருடம் நடந்த  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் சுமார் 69 பேர் உயிர் இழந்தனர்.  இந்த சட்டத்தின் மூலம் பல இஸ்லாமியர்கள் குடியுரிமை இழக்கலாம் என அஞ்சப்படுகிறது.   எனவே தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு இத்தகைய எதிர்ப்பு நிலவி வருகிறது.

ஆனால் மத்திய அரசு இந்த தேசிய மக்கள் தொகை  பதிவேடு (சுருக்கமாக என்  பி ஆர்) கொண்டு வருவதில் முனைப்பாக உள்ளது.  இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  ரூ.3,768 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.   இதையொட்டி மத்திய தேசிய பதிவாளர் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்ளார்.

இதில் முதல் கட்டமாக சென்ற வருடம் ஏப்ரல் 1 முதல் வீடுகள் எண்ணிக்கை, எடுக்கத் திட்டமிடப்பட்டது.   ஆனால் கொரோனா தொற்று கரணமக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  எனவே இந்த வருடம் அந்த பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   ஆயினும் கொரோனா தடுப்பூசிப் பணி தொடக்க நிலையில் உள்ளதால் விரைவில் இது தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதில் குறிப்பாக முதல் கட்ட மாதிரி கணக்கெடுப்பை எடுக்க ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த செயலியில் வீடுகள் எண்ணிக்கை, வீட்டு அமைப்புக்கள், மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து பதிவுகள் செய்யப்பட உள்ளது.   இந்த சோதனைகள் நடக்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஆனால் இந்த செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்த பயிற்சி அளிக்கபட்டு வருகிறது.   எனவே விரைவில் தேசிய மக்கள் தொகை  பதிவேடு அமைக்கும் முதல் கட்ட பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   மேலும் இந்த கேள்விகளில் விண்ணப்பதாரரின் எரிவாயு இணைப்பு, வானொலி, தொலைக்காட்சி, மடிக்கணினி, கணினி, தொலைப்பேசி, மொபைல்கள், இண்டர்நெட் வசதி என பலவும் இடம் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு விண்ணப்ப கேள்விகள் குறித்த விவரம் வெளியாக வில்லை என்னும் நிலை உள்ளது.  ஆயினும் கடந்த 2019 ஆம் வருடம் நடந்த மாதிரி கணக்கெடுப்பில் தந்தையின் பிறந்த தேதி, இடம், மற்றும் தாயின் பிற்ந்த தேதி மற்றும் இடம், தாய்மொழி,ல் ஆதார் உள்ளிட்ட பல விவரங்கள் கேட்கப்பட்டது நினைவிருக்கலாம்.  எனவே இந்த செயலியும் இது போன்ற கேள்விகள் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.