சென்னை,
டிடிவி தினகரன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நிதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 21ந்தேதி நடைபெற்றது. இதில் சுயேச்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து, வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைத்துள்ளன. 30 லட்சம் ரூபாய் அந்த தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், அவர் சட்டபேரவைக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.