சென்னை: நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது “மர ஆம்புலன்ஸ்” திட்டம்.
சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை நாளான மே மாதம் 22ம் தேதி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு.
சென்னை நகர் முழுவதும் மரக் கன்றுகளுடன் சுற்றித் திரியும் இந்த மர ஆம்புலன்ஸ், வேறோடு பெயர்த்தெறியப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடும். வார்தா மற்றும் கஜா புயல்களால் இழந்த மரங்களை ஈடுசெய்யும் வகையில் புதிய மரங்கள் நடப்படும்.
மேலும், இறந்துபோன மரங்களை அகற்றவும் பயன்படுவதோடு, நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளையும் மேற்பார்வை செய்யும்.
இந்த ஆம்புலன்ஸ், விதை வங்கி, செடிகளை விநியோகம் செய்தல், மரம் நடுதலில் மக்களுக்கு உதவுதல் மற்றும் மரக் கன்றுகளை ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொள்கிறது.
இந்த ஆம்புலன்சில் தாவரவியல் நிபுணர்கள் மற்றும் உதவியாளர்களும் இருப்பார்கள். இதன்மூலம், தோட்டக்கலை உபகரணங்கள், தண்ணீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை ஆம்புலன்சிலேயே எப்போதும் வைக்கப்பட்டிருக்கும்.
இந்த ஆம்புலன்ஸ் பள்ளிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்குச் சென்று, மரம் நடுதல் உள்ளிட்ட பல தொடர்புடைய விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஆலோசனைகளையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.