சென்னை :
மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 22ந்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்ததும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தூத்துக்குடி சென்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நிதி உதவியும், ஆறுதல் கூறினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு சமூக விரோதிகளே காரணம் என்று கூறினார். இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் கருத்து குறித்து, இன்று விமான நிலையம் வந்த தமிழக சமத்துவக்கட்சி தலைவர் சரத்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சரத்குமார், மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் பேசி உள்ளார். அவர்மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், கலவரத்தில் சமூக விரோதிகள் எனக் கூறும் ரஜினி, அவர்களை பற்றிய விவரங்களை ஒருநபர் விசாரணை ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.