திருவனந்தபுரம்

த்மநாப சாமி கோவிலில் திறக்கப்படாமலிருக்கும் பொக்கிஷ அறையை திறப்பதற்கு அரச குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

உச்சநீதி மன்ற ஆணைப்படி கோவிலின் செல்வங்கள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷ அறையில் ஒரு அறை தவிர மற்ற அறைகள் ஏற்கனவே திறந்து சோதிக்கப் பட்டது தெரிந்ததே.

இந்தக் கோயில் முன்பு திருவாங்கூர் அரச பரம்பரையினரால் நிர்வகிக்கப் பட்டு வந்தது.   அந்த அரச பரம்பரையில் வந்தவர் ஆதித்ய வர்மா.  அவர் இந்த அறையை திறந்து சோதிக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  அவரைப் போலவே அவர் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களும் இந்த அறையை திறந்து சோதிப்பது பாவச்செயல் எனக் கூறி வருகின்றனர்.

ஆதித்ய வர்மா இது பற்றி “அந்த அறை மிகவும் ரகசியமானது, புனிதமானது, அந்த புனிதத்தை எதற்கு கெடுக்க வேண்டும்?  ரகசியத்தை எதற்கு அம்பலப் படுத்த வேண்டும்?  அந்த அறையில் இருந்து கோவிலுக்குள் செல்லும் சுரங்கப் பாதை உள்ளது.  இது அரச ரகசியம் அதை எதற்கு அனைவருக்கும் காட்ட வேண்டும்  இது பற்றி ஏற்கனவே கேரள அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் அவர்களிடம் பேசி உள்ளேன்.  கோயிலின் தூய்மை என்பது பாதுகாக்கப் பட வேண்டிய ஒன்று.” என கருத்து தெரிவித்தார்.

மேலும் ”இந்த அறையை திறக்கக்கூடாது என்பது தெய்வக் கட்டளை.  இதற்கு முன்பு இந்த அறையை திறக்க தேவபிரசன்னம் (கடவுளின் அனுமதி கேட்கும் கேரள முறை) செய்து பார்த்ததில் திறக்கக் கூடாது என கடவுள் உத்தரவு வந்தது.  அதை மீறி திறந்தால் அரச குடும்பத்துக்கு மட்டும் அல்ல நாட்டுக்கும் கெடுதல் நேரலாம்.” எனக் கூறி உள்ளார்

நாடு குடியரசு ஆகியும் இன்னும் அரச குடும்பம் ஆதிக்கம் செலுத்தும் எண்ணத்தில் உள்ளதாக சிலர் கருதுகின்றனர்.  அதற்கு அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர், “எங்களிடம் மறைக்கும் படி எதுவும் இல்லை.  சிலர் அந்த அறையில் ஏதோ ரகசியம் உள்ளது, அதனால் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றெல்லாம் தவறாக சொல்லி வருகிறார்கள்.  அதில் சிறிதளவும் உண்மை இல்லை.  மக்களின் நலனுக்காக, கடவுளின் ஆணையை மீறி திறப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.    கடந்த 2012ஆம் ஆண்டு அந்த அறையை திறக்க முயன்ற போது ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது கண்டு அதிர்ந்து போய் நீதியரசர்கள் ராஜன் மற்றும் கிருஷ்ணன் அந்த அறையை திறக்கவில்லை.” எனக் கூறினார்.

அதே சமயத்தில் ஆதித்ய வர்மா உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுக்கு தானோ தன் குடும்பமோ எதிராக இல்லை எனவும் கூறி வருகிறார்.