டில்லி
மாநிலங்களுக்கு இடையில் மருத்துவ ஆக்சிஜன் மாற்றுவது தவறு இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை மிகவும் அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டால் ஒரு சில இடங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இதையொட்டி பல மாநிலங்கள் தங்கள் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த கொரோனா தொற்று அதிகரிப்பு வேளையில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் முழுவதும் தங்கள் மாநிலங்களுக்கே வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவ ஆக்சிஜனை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு மாற்றுவது தவறில்லை எனக் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாநில போக்குவரத்துத் துறை ஆக்சிஜனை மாநிலம் விட்டு மாநிலம் மாற்றத் தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் எந்த ஒரு மாநிலத்துக்கும் உற்பத்தியாகும் ஆக்சிஜன் முழுவதும் உபயோகப்படுத்த உரிமை இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.