சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் உள்பட பல பணிகளில் பணியாற்றி வரும் அலுவலர்கள் விருப்ப மாறுதல் நடத்திட தமிழ்நாடு அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் இடமாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து வகை இயக்கங்கள், அலுவலகங்களின் நிர்வாகம் திறம்பட செயல்படும் பொருட்டு, அதில் பணிபுரியும் பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில், பணியிடத்தில் இல்லாமல், அவர்களை மாறுதல் செய்திடவும், விருப்ப மாறுதல் ஆண்டுதோறும் நடத்திடவும் தமிழ்நாடு அரசால் நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம், இயக்கங்கள், பள்ளிகளில் கடந்த மாதம் (ஜூன்) 30-ம்தேதி நிலவரப்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களில் பணிபுரிபவர்களின் பட்டியலை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறையின் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த ப ணியாளர்கள் விவரங்களை பட்டியலாக தயாரித்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும், எந்த விவரங்களும் விடுபடாமல் முழுமையான வகையில் அளிக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.