சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக இருந்த குமரகுருபரன் உள்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள், 6 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

டெண்டர் சர்ச்சையில் சிக்கிய குமரகுரபரன், வணிக வரித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதுபோல ஐ.ஜி மற்றும் 5 எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் உட்பட மொத்தம் 6 உயர் காவல் அதிகாரிகள் உடனடியாகப் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் உள்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்தது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல், சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றங்களையும் அரசு வழங்கியுள்ளது.

இதுவரை காவல்துறை அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் என 100- க்கும் மேற்பட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று (மே 22) 15-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் சார்புச் செயலாளர் சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஜெ.குமரகுருபரன், வணிக வரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சுற்றுலா, கலாச்சாரத் துறைச் செயலாளராக ஸ்வர்ணா, தொழில் மற்றும் முதலீட்டுத்துறை சிறப்புச் செயலாளராக சந்தீப் நந்தூரி, பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக பிரகாஷ், ஜவுளித்துறை ஆணையராக சோபனா, வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் செயலாளராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் தொழிலாளர் நலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நகர திட்ட ஆணையராக கிரண் குர்லா மற்றும் மீன்வளத்துறை இயக்குநராகவும், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் விஜயகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறை இயக்குநராக மகேஷ்வரி ரவிக்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக செந்தில் ராஜ், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்குநராக பாஸ்கர பாண்டியன், கருவூலத்துறை இயக்குநராக சாருஸ்ரீ, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக ரவிகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை இயக்குநராக ஆஷா, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநராக கிறிஸ்துராஜ், டிட்கோ முதன்மைச் செயலாளராக கார்த்திகேயன், பசுமை எரிசக்திக்கழக நிர்வாக இயக்குநராக வினய், தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநராக அனீஷ் சேகர், ஊரக வளர்ச்சி திட்ட தலைமைச் செயல் அதிகாரியாக சஜீவனா, சிப்காட் நிர்வாக இயக்குநராக ராமன், சேலம் மாநகராட்சி ஆணையாளராக லலிதியா நீலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

மேலும், ஐ.ஜி மற்றும் 5 எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் உட்பட மொத்தம் 6 உயர் காவல் அதிகாரிகள் உடனடியாகப் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் உள்துறை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் க. மணிவாசன் வெளியிட்டுள்ளார்.

அதில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரிகளுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களுக்குப் புதிய எஸ்.பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏ.எஸ்.பி (ASP) அந்தஸ்தில் இருந்த இரண்டு அதிகாரிகளுக்கு எஸ்.பி-யாகப் பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டாக்டர் பி.கே. செந்தில்குமாரி சென்னையில் காலியாக இருந்த போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவின் காவல் துறை ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எஸ்.பி-யாக இருந்த தொங்கரே பிரவின் உமேஷ் திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த வி. சியாமளா தேவி சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு-II இன் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்கிறார். கோவை மாநகரப் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையராக இருந்த எஸ். அசோக் குமார் தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த அக்சய் அனில் வாக்ரே, எஸ்.பி-யாகப் பதவி உயர்வு பெற்று திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் வி. லலித் குமார் எஸ்.பி ஆகப் பதவி உயர்வு பெற்று, பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக புதிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.

[youtube-feed feed=1]