சென்னை: ரயில்களில்  முன்பதிவு செய்யும் நாட்கள் 60 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை இன்று (நவம்பர் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான விதிகளை இந்திய ரயில்வே சமீபத்தில் மாற்றி அறிவித்தது. அதன்படி, இந்த புதிய   மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பயணிகள் இனி எந்த ரயிலிலும் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம். இதுவரை, பயணிகள் தங்கள் எதிர்கால பயணத்தின்படி 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு, 60 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும்  பயணிகள், பாசஞ்சர், வந்தே பாரத், எக்ஸ்பிரஸ் என அனைத்து ரயில்களின் முன்பதிவு காலம் 120 (4 மாதங்கள்) இருந்து வந்த நிலையில், அதை 60 நாட்களாக (இரு மாதங்கள்)  குறைத்து இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த புதிய நடைமுறை  இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்தாலும், ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை,  அவர்கள் திட்டமிட்டபடி பயணிக்கலாம் என தெரிவித்து உள்ளது.

பயணிகள் தங்கள் எதிர்கால பயணத் திட்டங்களின்படி IRCTC ஆப் அல்லது இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டரிலும் முன்பதிவு டிக்கெட்டை பெறலாம்.

மேலும்,  ரயில்வே கடந்த ஓராண்டில் குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்குப் பயணிக்கும் பயணிகளின் கணக்கெடுப்பை பலமுறை நடத்தியது மற்றும் ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது நகரத்திற்கு பலமுறை பயணம் செய்யும் 50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளைக் கண்டறிந்துள்ளது. இத்தகைய பயணிகளின் பயண வரலாற்றின் அடிப்படையில், சிறப்பு ரயில்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பண்டிகைக் காலங்களில் ரயில்வே அவர்களுக்கு செய்திகளை அனுப்புகிறது. இதனால் அவர்கள் தங்கள் வழித்தடத்தின் சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.