டெல்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளை தவறாக பயன்படுத்தியதாக சர்ச்சைக்குரிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் யுபிஎஸ்சி தேர்ச்சியை ரத்து செய்து யுபிஎஸ்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த பூஜா கேத்கரின் தேர்வை தற்போது ரத்து செய்துள்ளது தேர்வு முகமை. அடையாளத்தை மாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இனி வருங்காலத்தில் தேர்வு எழுத நிரந்தர தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்கு உள்ளதான பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் என்பவர் பயிற்சியில் சேருவதற்கு முன் பே, தனக்கு வீடு, கார் தேவை என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் ஆட்சியர் இல்லாதபோது, அவரது வாகனத்தை பயன்படுத்தி வந்ததாகவும், அவர் மாற்றுத்திறனாளி என்ற போர்வையில் சலுகையுடன் யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்டதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. தொடர்ந்து அவர்மீது அடுத்தடுத்த பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அவரத செயல்பாடு மற்றும் யுபிஎஸ்சி தேர்வு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து ஒரு தேர்வாளருக்கு வழங்கப்படும் அதிகபட்ச முயற்சிகளை பயன்படுத்தி, பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் மீ சிவில் சர்வீஸ் தேர்வில் மோசடி செய்தது தெரிய வந்துள்ளதாக, யுபிஎஸ்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பேசிய கமிஷன், “கடந்த ஜூலை 18ம் தேதி கேத்கரின் மோசடி நடவடிக்கைகளுக்காக ஷோ காஸ் நோட்டீஸ் (SCN) அளிக்கப்பட்டது. அவர் தனது அடையாளங்களை மாற்றி தேர்வு எழுதி இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
34 வயதான பூஜா கேத்கர் ஷோ காஸ் நோட்டீஸ்க்கு பதிலளிக்க ஜூலை 25 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. தனக்கு ஆகஸ்ட் 4ம் தேதி வரை நீட்டிப்பு வேண்டும் என்று கேட்டு இருந்தார், ஆனால் UPSC தரப்பில் ஜூலை 30 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. மேலும் இதற்கு பிறகு தேதி நீட்டிப்பு கொடுக்கப்படாது என்றும், இது உங்களுடைய இறுதி வாய்ப்பு என்று வலியுறுத்தியது. ஆனாலும் UPSC தரப்பில் கொடுக்கப்பட்ட காலக்கெடுவில் பூஜா கேத்கர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து, பூஜா கேத்கர் CSE-2022 விதிகளை மீறியதை உறுதி செய்து, அவரது தற்காலிக வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. இனி வரும் காலத்தில் UPSC தேர்வு எழுதுவதில் இருந்தும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
UPSC தேர்வில் மோசடியில் ஈடுபட்ட பூஜா கேத்கர் சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஐஏஎஸ் ஸ்கிரீனிங் செயல்முறையை முடித்த 15000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களின் தரவை UPSC முழுமையாக மதிப்பாய்வு செய்து வந்தது. தீவிரமாக நடைபெற்ற இந்த விசாரணையில் பூஜா கேத்கர் தவிர, வேறு யாரும் இந்த மோசடியை செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தனது பெயரை மட்டும் இன்றி, பெற்றோரின் பெயரையும் மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார் பூஜா கேத்கர். இந்நிலையில், எதிர்காலத்தில் வேறு யாரும் இது போன்ற மோசடியில் ஈடுபடாமல் இருக்க SOPகளை மேலும் வலுப்படுத்த UPSC செயல்பட்டு வருகிறது.
தற்போது விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் மேலோட்டமாக மட்டுமே மறுஆய்வு செய்யப்படுகிறது என்று UPSC தரப்பில் இருந்து கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் 1000க்கும் மேல் சான்றிதழ்களை சரி பார்க்க வேண்டி உள்ளதால் அவற்றின் நம்பகத்தன்மையை ஆராய்வது சிரமமாக உள்ளதாக தெளிவுபடுத்துகிறது. சான்றிதழின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன என்று UPSC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியில் சேருவதற்கு முன்பே கார், வீடு தேவை என மாவட்ட ஆட்சியரை மிரட்டிய பயிற்சி ஐஏஎஸ் பெண் அதிகாரி….