பீகார் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, தேர்வை ரத்து செய்ய கோரி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை ஆதரித்து பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் உள்ள காந்தி சிலைக்கு கீழே ஜான் சூரஜ் அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை திடீரென நேற்றிரவு முதல் துவங்கினார்.
பப்பு யாதவ் எம்.பி. தலைமையில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் வீடு முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 13ம் தேதி பீகார் மாநிலத்தில் நடைபெற்ற அரசு பணியாளர் தேர்வில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக தற்போது பீகார் மாநிலம் முழுவதும் சர்ச்சைகள் வெடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் இறங்கியதை அடுத்து பீகாரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், அரசியல் கட்சியினரின் போராட்டத்தை முடக்க தேவையான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.