சென்னை:

வேளச்சேரி-பரங்கிமலை மார்க்கத்தில் ஆதம்பாக்கம்  வரை  இன்னும் 3 மாதங்களில் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து பரங்கிமலை  வரை பறக்கும் ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் முதல்கட்டமாக வேளச்சேரி வரை பணிகள் முடிவடைந்து ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், வேளச்சேரி யில் இருந்து பரங்கிமலை  வரை சில இடங்களில் வழக்குகள் காரணமாக  பணிகள் மேற்பட்ட முடியாத நிலை நீடித்துவந்தது. அந்த பகுதியைச்சேர்ந்தவர்கள் பல வழக்குகளை தொடர்ந்து தடை போட்டனர். இந்த வழக்குகள் அனைத்தும் பைசல் செய்யப்பட்ட நிலையில், உடனே பணியைத் தொடங்க சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து,  11 ஆண்டுகளுக்கு பிறகு,  மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேளச்சேரி யில்  புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் ஏற்கனவே முடிவடைந்து தயார் நிலையில் இருந்த நிலையில், ஆதம்பாக்கம் முதல் பரங்கிமலை வரை உள்ள சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நிலப்பிரச்சினை காரணமாக இழுபறி நீடித்து வந்தது. தற்போது நீதி மன்றமும் உடனே திட்டத்தை அமல்படுத்த பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்த நிலையில், ரயில்வே திட்ட பணிகள் மறுபடியும் தொடங்கி தண்டவாளம், மின்கம்பங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சுமார்  60 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிந்து விட்ட நிலையில், வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் வேளச்சேரி- ஆதம்பாக்கம் இடையே மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு பறக்கும் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பரங்கிமலை வரையிலான அடுத்த கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், இன்னும் ஓரிரு ஆண்டுகளில்,  கடற்கரை முதல் பரங்கிமலை வரை ரயில்சேவை முழுமையாக இயக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.