டில்லி

ரெயில்கள் அடிக்கடி தாமதம் ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என ரெயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் 30% ரெயில்கள் காலதாமதமாக சென்றுள்ளன.  இதனால் பயணிகள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.    இதே நிலை தற்போது விடுமுறைக்காலத்திலும் தொடர்வதால்  ரெயில்வே நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.    இது குறித்து ரெயில்வே பொது மேலாளர் தெரிவிக்கையில் ”கடந்த வருடம் 49.59% ரெயில்கள் தாமதமாக சென்றுள்ளன.   அதை தவிர்க்க நிர்வாகம் பல முயற்சிகள் எடுத்த போதிலும் இந்தவருடம் மே மாத இறுதி வரை சுமார் 32.74% ரெயில்கள் தாமதம் அடைந்துள்ளன” என கூறி உள்ளார்.

மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இனி ரெயில்கள் தாமதம் ஆனால் சம்பந்தப்பட்ட பகுதி ரெயில்வே அதிகாரிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்துள்ளார்.    அமைச்சரின் இந்த அறிவிப்பு  பயணிகளுக்கு சிறிது திருப்தியை அளித்துள்ளது.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர், “இந்த விடுமுறை நாட்களில் தேவையற்ற ரெயில் தாமதத்தை தடுக்க வேண்டியது அந்த பகுதி மேலாளரின் கடமை ஆகும்.    அதனால் அமைச்சர் வரும் 30ஆம் தேதிக்குள் நிலைமையை சீராக்க வேண்டும் என கெடு அறிவித்துள்ளார்.    அதன் பிறகும் தாமதம் தொடர்ந்தால் மட்டுமே அதிகாரிகளின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.    எனவே கால தாமதத்தை தவிர்க்க சரியான நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு கவலை ஏதும் இல்லை” என கருத்து கூறி உள்ளார்.