சம்பவ தேதியில் இருந்ததை விட இழப்பீடு வழங்கும் தேதியில் உள்ள இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்த நபருக்கான இழப்பீடு குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வாறு கூறியுள்ளது.
2003ம் ஆண்டு ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்த நபருக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இறந்ததாகக் கூறப்படும் நபர் ரயிலில் பயணம் செய்ததற்கான ஆதாரத்தை இழப்பீடு கோரும் நபர் சமர்ப்பிக்கவில்லை என்று ரயில்வே சார்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இழப்பீடு கோரும் நபர் இறந்தவரின் உடமைகளில் ரயில் டிக்கெட்டை மீட்கவில்லை என்றபோதும் அவர் ரயிலில் பயணம் செய்ததற்கான வேறு ஆதாரங்களை தனது பிராமண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மேலும், இறந்தவரின் உடற்கூராய்வில் அவர் ரயிலில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்பட்ட சான்றுகளையும் இணைத்துள்ளார். அதனால் இறந்தவர் ரயிலில் பயணம் செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ரயில்வே துறைக்கு தான் உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தவிர, ரயில் விபத்தில் இறந்தவருக்கு 2003ம் ஆண்டு இருந்த ரூ. 4 லட்சம் இழப்பீடு தொகை 2016ம் ஆண்டு ரூ. 8 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து இறந்தவருக்கு சம்பவத்தன்று இருந்த இழப்பீடு தொகைக்குப் பதில் தற்போது இழப்பீடு வழங்கும் தேதியில் உள்ள உயர்த்தப்பட்ட புதிய இழப்பீட்டு தொகையை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.