திருவள்ளூர்: புகழ்பெற்ற திருவள்ளூர்  வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் மூவர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெருமாளின்  108 வைணவ திவ்ய தேசங்களில்  திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோயிலம் ஒன்று.  திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசம் திருவள்ளுர் வீரராகவ பெருமாள் கோவல். இங்குள்ள  கோயில் குளத்தில் மூழ்கி குளிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர், நீரில் மூழ்கி  பரிதாபமாகப் பலியாகினர். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை மாத உற்சவம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில் உள்ள பாடசாலையில் இருந்து பாராயணம் படிப்பதற்காக 5 பேர்  அக்கோவிலுக்கு வந்து வந்துள்ளனர் கோவிலில் பாராணம் செய்து வந்தவர்களில் 3 பேர், நேற்று காலை  6 மணியளவில் சந்தியாவதனம் செய்வதற்காக குளத்தில் இறங்கிய போது ஒரு மாணவர் மூழ்கியுள்ளார். அந்த மாணவரைக் காப்பாற்ற முயன்ற போது மற்ற இரண்டு பேரும் சேர்ந்து மூன்று பேர் குளத்தில் மூழ்கியுள்ளனர்.

 இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்வர்கள், குன்றத்தூரைச் சேர்ந்த ஹரிஹரன் (17), அம்பத்தூரைச் சேர்ந்த வெங்கட்ரமணன் (19), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வீரராகவன் (24) என்பது தெரிய வந்தது.   அவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இந்த கோவில் குளம் முறையாக பராமரிக்கப்படாமல்,  பச்சை பாசி படிந்து யாரும் இறங்கி குளிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசி வரும் நிலையில், பாடசாலை மாணவர்கள் அதில் குளிக்கச்சென்று சேற்றில் சிக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.