மும்பை: நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில், மராட்டிய மாநிலத்தில் மட்டும் மொத்தம் 24 பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை தேர்வுசெய்யப்பட்டுள்ள 24 பேரில், கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி, தேர்தலில் முதல்முறையாக நின்று வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதீய ஜனதா சார்பில் 12 பெண் உறுப்பினர்களும், சிவசேனா சார்பில் 2 பெண் உறுப்பினர்களும் வென்றுள்ளனர். பாரதீய ஜனதா 17 பெண்களுக்கும், சிவசேனா மொத்தம் 8 பெண்களுக்கும் போட்டியிட வாய்ப்பளித்தது.

காங்கிரஸ் கட்சி 14 பெண்களுக்குப் போட்டியிட வாய்ப்பளித்தது. அதில் வென்றவர்கள் 5 பேர். தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 பெண்களுக்கு வாய்ப்பளித்து, அதில் வென்றவர்கள் 3 பேர். இவர்கள்தவிர, சுயேட்சையாக வென்றவர்கள் 2 பெண்கள். இந்தவகையில், மொத்தமாக 24 பெண்கள் மராட்டிய சட்டசபைக்குத் தேர்வாகியுள்ளனர்.