ஸ்வீடனில் உள்ள நிறுவனம் ஒன்று அனில் அம்பானி மீது தொடுத்த அவமதிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஸ்வீடனில் தொலைத் தொடர்பு சாதனங்களை எரிக்சன் என்ற நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து சாதங்களை வாங்கிய அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் அதற்கான தொகையை செலுத்த தவறிவிட்டது.
இதனால் அனில் அம்பானி மீது உச்ச நீதிமன்றத்தில் எரிக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கின் சமரச பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ரூ.550 கோடியை எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த ஒப்புதல் அளித்தது. அந்த தொகையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு நீதிமன்றம் கெடு அளித்தது.
இதுவரை அந்த தொகையை நிலையன்ஸ் நிறுவனம் செலுத்தாதால் எரிச்சலடைந்த எரிக்சன் நிறுவனம் அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் பணத்தை செலுத்தாத அனில் அம்பானியை குற்றவாளி என அறிவித்தனர். தன்னை குற்றவாளி என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்ததை கேட்டு அனில் அம்பானி அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், தனது வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும், 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை அளிக்க வேண்டுமென அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இரு இயக்குநர்களிடம் நீதிபதிகள் கறாராக தெரிவித்தனர். அவ்வாறு தொகையை செலுத்த மீண்டும் தவறினால் அனில் அம்பானி உட்பட மூவரும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை பெற நேரிடும் எனவும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு பெற்ற 2வது தொழிலதிபர் அனில் அம்பானி. இதற்கு முன்னதாக தொழிலதிபர் சுப்ரத் ராய் சஹாரா நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.