மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், நாட்டின் தற்போதைய மந்தநிலைக்கு வழிவகுத்து இருப்பதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டில்லியில் நடந்த ப்ளூம்பெர்க் NEF உச்சி மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள அவர், “முதலாவதாக, அரசு அதிக அளவு பணப்புழக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தனியார் துறையில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் இல்லாமல், நம்மால் ஒருபோதும் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியாது. மூன்றாவதாக, அரசாங்கம் தொழில்துறை தொடர்பான சில விவகாரங்களில் இருந்து விலக வேண்டும். குறிப்பாக சாலைகள் உட்பட சில அரசு சொத்துக்கள் தொடர்பான விவகாரங்களை மறுசுழற்சி முறையில் செய்ய வேண்டும். இதை நாம் விமான நிலையங்களுடன் முன்பே செய்துள்ளோம். எரிவாயு குழாய் இணைப்புகள், பரிமாற்றக் கோடுகள் போன்றவை தனியாருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். பொதுத்துறையை சேர்ந்த நிறுவனங்களை தனியாராக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. இவற்றை தனியாராக்கினால், வங்கிகள் தரப்பிலிருந்து தாராளமாக கடன் அளிக்கப்படும். ஆனால் இது முக்கியமான பணி என்பதால் கவனம் அதிகம் தேவைப்படும்.
ஜிஎஸ்டி, ஐபிசி, ரேரா என்று அதிகமான சீர்திருத்தங்கள் இருந்ததே, மந்தநிலைக்கு ஒரு காரணமாகிவிட்டது. நாங்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் எல்லோம் மிகப்பெரிய பணியை கொண்டது. அத்தோடு, எங்களின் அடுத்த சுற்று சீர்திருத்தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரங்கம், நிலக்கரி போன்ற துறைகளைச் சார்ந்தே இருக்க வேண்டும். நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே துறை போன்றவைகளை அரசு வணிகமயமாக்க வேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில், அவை உண்மையில் இந்தியாவிற்கு அதிக அளவிலான வளர்ச்சியை உண்டாக்கும்.
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் ஒரு மையமாக இந்தியாவை உருவாக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும். மொபைல் புரட்சி, தொலைதொடர்பு உபகரண புரட்சியை எல்லாம் நாம் எப்போதோ இழந்துவிட்டோம். ஆனால், மின்சார வாகனங்களில் அவை நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாற்றம் பெறுவதை நாங்கள் விரைந்து உறுதி செய்வோம்” என்று தெரிவித்தார்.