பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில், இறுதிக்கப்பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்ததை தொடர்ந்து பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்பு கொடுக்கப்படுவதை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், நாளை வாக்குப்பதிவு தேவையான வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
224 சட்டமன்ற தொகுதிகள் உள்ள கர்நாடகாவில் ஒரு வேட்பாளர் மரணமடைந்ததை தொடர்ந்து 223 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
அடுத்த வருடம் நாடு முழுவதும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக கர்நாடக சட்டமன்ற தேர்தல் கருதப்படுவதால், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. ஆட்சியை பிடிக்க இரு கட்சிகளும் பம்பரமாக சுழன்று பிரசாரம் மேற்கொண்டனர்.
பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, காங்கிரசுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போன்றோர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வந்தனர்.
இந்நிலையில், நாளை வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்காக கர்நாடக போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படையினர் 50 ஆயிரம் பேரும் கர்நாடகத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை நடைபெறும் வாக்குப்பதிவை தொடர்ந்து வரும் 15ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.