சென்னை:
நாளை நடைபெற இருக்கும் அகில இந்திய அளவிலான பந்த்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்வதால், தமிழ்நாட்டில் நாளை அரசு அலுவலகங்கள் இயங்குமா, பஸ்கள் இயக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
நாளை நடைபெற இருக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகில இந்திய தொழிற்சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சங்கம், அரசு போக்குவரத்து தொழிற்சங்கள் பங்கேற்ப இருப்பதால் பஸ்கள் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. அகில இந்திய அளவில் பாரதிய மஸ்தூர் தொழிற்சங்கம் இந்த பந்தில் பங்கேற்கவில்லை.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மய மாக்கக் கூடாது, புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐ.என்.டி.யூ.சி., – எச்.எம்.எஸ்., – சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட, பல தொழிற்சங்கங்கள் இணைந்து அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளன.
இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் அருன்ஜேட்லி தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, தொழிற்சங்கங்களை சமாதானப்படுத்தும் வகையில், ‘அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை, இரண்டு மடங்காக உயர்த்தப் படும் என்றும், புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ், 2004 முதல் பணிக்கொடை தரப்படும்’ என அறிவித்தார். ஆனால், அரசின் அறிவிப்பை தொழிற் சங்கங்கள் ஏற்க மறுத்து விட்டன. திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
தமிழகம் நிலை….?-
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறினார்.
புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும்; ஊதிய மாற்றக் குழு அமைக்க வேண்டும்; அரசில், காலியாக உள்ள, மூன்று லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, தமிழகத்தில் போராடி வருகிறோம். அரசு அலட்சியமாக உள்ளதால், வேறுவழியின்றி, ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்கிறோம். அரசுவருவாய் துறை அலுவலர் சங்கத்தினரும், வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர், இதனால் தாலுகா, கலெக்டர் அலுவலகங்கள் உட்பட, அனைத்து அரசு அலுவலங்களிலும், நாளை பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து தொழிற் சங்கங்களும், போராட்டத்தில் பங்கேற்கின்றன; இதனால், ஆட்டோ, லாரி, வேன் போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், ஆளும் கட்சி அல்லாத, அனைத்து அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களும், போராட்டத்தில் பங்கேற்பதால், அரசு பஸ்களின் இயக்கம் பாதிக்கப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து தொழிற்சங்க தலைவர், ஆறுமுக நயினார் கூறியது,
அரசு போக்குவரத்து கழங்கள், ஆண்டுக்கு, 1,200 கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளாடுகின்றன. மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் கட்டணம் உள்ளிட்ட, இழப்பீட்டுத் தொகையை, அரசு தர வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு நடத்துவதோடு, ஓய்வு பெற்றோருக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும் எனக் கோரி, போராட்டத்தில் பங்கேற்கிறோம்;, நாளை பஸ்களை இயக்க மாட்டோம் என்று கூறினார்.
”சாலை பாதுகாப்பு மசோதாவில், மத்திய அரசு திருத்தம் செய்வதைக் கண்டித்து, நாளை, சென்னைத் துறைமுகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்; கனரக வாகனங்கள் இயக்கப் படாது,” என்று சாலை போக்குவரத்து பாதுகாப்புக் குழு தலைவர் கூறினார்.
இதனால், சென்னை மட்டு மின்றி, தமிழகம் முழுவதும், துறைமுகங்களின் செயல்பாடுகளும் தடைபடும்; வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.