டில்லி

உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி மீது கடன் தவணை ஒத்திவைப்பு குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் 2020 ஆம் வருடம் மார்ச் 25 முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.   அதையொட்டி அனைத்து அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.   இதனால் ஏராளமானோர் பணி இழந்தனர்.  நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பலரது வாழ்க்கை ஆதாரமே பாதிக்கப்பட்டது

இதையொட்டி ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.  அதன்படி வங்கிக் கடன்களுக்கான மாதத் தவணை மற்றும் வட்டியைக் கடந்த வருடம் மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை கட்ட வேண்டாம் எனச் சலுகை அளித்தது.   ஆனால் அவ்வாறு வட்டி மற்றும் மாதத்தவணை கட்டாத தொகைக்கு மேலும் வட்டி விதிக்கப்பட்டது.

இவ்வாறு வட்டிக்கு வட்டியை விதிப்பதை எதிர்த்து ரிசர்வ் வங்கி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த மேல் வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.  உச்சநீதிமன்றம் மக்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.