பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-வது நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருவதுடன், 6,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன.
ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அங்குள்ள அவரது நினைவிடத்தில், சமுதாய தலைவர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தங்களது ஆதரவாளர்கள் புடைசூழ வருவது வழக்கம்.
இதையொட்டி, பரமக்குடி முழுவதும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அரசியல் மற்றும் சமுதாய தலைவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வருபவர்கள் அவருடைய சொந்த வாகனத்தில் தான் வரவேண்டும், ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, காவல்துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும், கோஷங்களை எழுப்பக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி அஸ்ரகார்க், இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மாவட்ட முழுவதும் 41 காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அதில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் பரமக்குடி நகரில் பாதுகாப்புப் பணியினை கண்காணிக்கவும் ,விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் 70 நிரந்தர கண்காணிப்பு கேமராக்கள், இது தவிர காவல்துறை சார்பில் 75 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி, அப்பகுதி முழுவதும் ஆளில்லா விமான மூலமும் கண்காணிக்கவும் போலீசார்கள் திட்டமிட்டுள்ளனர் என்றார்.
பரமக்குடி முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிர படுத்த திருச்சி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களிலிருந்து 6000திற்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதால் பரமக்குடி நகரம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார்.