சென்னை : இந்தியாவிலேயே அதிக காற்று மாசு உள்ள பகுதியாக டெல்லி திகழ்ந்து வரும் நிலையில், தற்போது சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் காற்றின் தரக் குறியீடு 230 ஆக இருப்பதாக கூறப்படு கிறது.
நாடு முழுவதும் தீபாவளியையொட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். நாளை தீபாவளி வரும் நிலையில், பல பகுதிகளில் இப்போதே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க தொடங்கிவிட்டனர். ஏற்கனவே இந்தியாவின் பல பகுதிகளில் தொழிற்சாலைகளால் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தீபாவளி பட்டாசு காரணமாக மேலும் மாசு அதிகரிக்கும் என்பதால், தலைநகர் டெல்லி உள்பட பல பகுதிகளில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
பட்டாசு வெடிப்பில் ஏற்படும் காற்று மாசு காரணமாக, சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உருவாகி வருவதாலும், ஆஸ்துமா , இருதய நோய் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விதிகளை மீறி பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கி உள்ளனர். அதே வேளையில், பல பகுதிகளில் அதிகாலையில் பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் காற்றின் தரம் குறைய தொடங்கி உள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 100- 200 வரை பதிவாகி உள்ளது. பெருங்குடியில் 169, ராயபுரத்தில் 121, மணலியில் 109, கொடுங்கையூரில் 112, அரும்பாக்கத்தில் 134 புள்ளியாகவும் காற்றின் தர குறியீடு பதிவாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி 230 வேலூரில் 123, கடலூரில் 112 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது. காற்றின் தரக் குறியீடு 0 – 50 வரையில் இருந்தால், காற்றின் தரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். அதுவே, அக்குறியீடு 400 – 500 ஆக இருந்தால், காற்று மிகவும் மாசடைந்து இருப்பதாக அர்த்தம்.
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாய அளவை தாண்டி நீடிப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். அதனால், சென்னையிலும் காற்று மாசு அதிகரிக்காதவாறு பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், தீபாவளியையொட்டி இன்றும் நாளையும் பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்படும் என்பதால் காற்றின் தரம் மேலும் மோசமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.