சென்னை
நாளை ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி வைத்தார். மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு நகரப்பகுதிகளில் கிடைத்த வரவேற்பினையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வ மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது.
நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூருக்கு வருகிறார். காலை 10.30 மணிக்கு அங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டு ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் என்னும் திட்டத்தை தொடங்கி வைத்து, மனுக்கள் பெறுதல் மற்றும் துறை சார்ந்த அரங்குகளை பார்வையிடுகிறார்.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்தின் சார்பில் மகளிர் பயணம் செய்யும் பழைய பஸ்களுக்கு பதிலாக 20 புதிய பஸ்களை முதல்வர் கொடி அசைத்து தொடங்கி வைத்து, அவர் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் மாவட்டம், ஓமலூர் விமான நிலையத்திற்கு 10 மணிக்கு வருகிறார். பிறகு அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். காவல்துறையிஅர் முதல்வர் வருகையையொட்டி தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.