டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நாளை மறுதினம் (ஜுலை 23ந்தேதி) நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் என்ற பெருமை பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தேர்தல் முடிவடைந்து, மூன்றாவதுமுறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் அமைச்சரவையில், மீண்டும் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்த நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார்.
இதற்காக நாடாளுமன்ற அவைகள் நாளை (ஜுலை 22ந்தேதி) மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12, 2024 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 18ஆவது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 25, 2024இல் தொடங்கி ஜூலை 4ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக முன்கூட்டியே முடிவடைந்தது.
இந்த நிலையில், நாளை மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி தொடங்க உள்ளது. இரண்டாவது நாளான நாளை மறுதினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட்டில், நாட்டின் பொருளாதார முன்னுரிமை மற்றும் சவால்களை தீர்க்கும் வகையில், பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) எளிதாக்குவது மற்றும் வரி இணக்கத்தின் சுமையை குறைப்பது ஆகியவை அரசாங்கத்தின் திட்டங்களில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றும், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்தின் ஒரு பகுதியாக வளர்ச்சி இயந்திரங்களாக மாற்றப்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.