மும்பை

காராஷ்டிர சட்டப்பேரவையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை பிற்பகல் 2 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடதத உள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றும் முதல்வர் பதவி பங்கீடு சர்ச்சையில் சிவசேனா கூட்டணியை முறித்துக் கொண்டது.  அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க முயன்றது.  இந்நிலையில் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆதரவுடன் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றார்.  அஜித் பவார் துணை முதல்வர் பதவி ஏற்றார்.

இதை எதிர்த்து சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. பாஜகவைச் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இந்நிலையில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித்பவார் மீண்டும் தனது கட்சிக்குத் திரும்பினார். அதையொட்டி பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு முன்னரே தேவேந்திர பட்நாவிஸ் ராஜினாமா செய்தார்.

அதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே நேற்று முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.   அப்போது அவரை விரைவில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.  அதன்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு உத்தவ் தாக்கரே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உள்ளார்.