ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி விலை 50 பைசா…விவசாயிகள் கண்ணீர்

Must read

குர்னூல்:

ஆந்திராவில் விலைச்சல் அதிகரிப்பு மற்றும் தேவை குறைந்ததால் தாக்காளி ஒரு கிலோ 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் குர்னூல் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் இருந்து அறுவடை முடிந்து சந்தைக்கு வாகனத்தில் கொண்டு செல்ல முயன்ற போது விலை வீழ்ச்சி குறித்த தகவல் கிடைத்தது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். செலவு செய்து சந்தைக்கு கொண்டு சென்றாலும் நஷ்டத்துக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தக்காளியை சாலையோரத்தில் கொட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் பட்டிக்கொண்டா மற்றும் அலூர் பகுதிகளில் ஆயிரகணக்கான ஹெக்டேரில் ஆண்டுதோறும் 2 முறை தக்காளி அறுவடை நடக்கும். இந்த ஆண்டு 18 ஆயிரம் ஹெக்டேரில் தக்காளி பயிரிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு விவசாயியும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தள்ளனர். 4 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட ரூ. 1.2 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

வாடகை டிராக்டர் மூலம் தக்காளியை சந்தைக்கு கொண்டு செல்லல முயன்றபோது தான் இடைத்தரகர் விலை வீழ்ச்சி குறித்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 10 கிலோ தக்காளியின் விலை ரூ. 5 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர் கூறும் விலைக்கு தக்காளியை விற்பனை செய்தால் பயிரிட வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், இதற்கு முன்பு வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியது. அரசு இதில் தலையிட்டு கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ. 9 வரை என ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.

மேலும், தக்காளி விலை இது போல் வீழ்ச்சி அடைவது என்பது முதல் முறை கிடையாது. ஆண்டுதோறும் அடிக்கடி இது போன்று நடக்கிறது என்று விவசாயி மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘தக்காளி விவசாயிகளுக்கு ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பல முறை போரட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை’’ என்றார். தோட்டக்கலைத் துறை அதிகாரி ரகுநாத் ரெட்டி கூறுகையில், ‘‘இங்கு பயிரிடப்படும் தக்காளி சாறு புளியவும் ஏற்றது கிடையாது. அதனால் இங்கு தக்காளி சாறு புளியும் தொழிற்சாலை அமைப்பது சாத்தியமில்லை’’ என்றார்.

More articles

Latest article