டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்று சாதனைபுரிந்துள்ள பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் பெகாசஸ் விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடந்த வாரம் முழுவதும் அவை முடக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஆக. 2) காலை இரு அவைகளும் கூடிய நிலையில், ஒலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில் சாதனை படைத்து, வெண்கலம் வென்ற பி.வி. சிந்துவுக்கு இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சிந்து நேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை சிந்து பெற்றுள்ளார்.
சிந்துவின் இந்தச் சாதனையை பாராட்டி பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “இந்த வரலாற்றுச் சாதனைக்காக, இந்த அவையின் சார்பாக சிந்துவை வாழ்த்துகிறேன். அவரது சாதனை இந்த நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமளிக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.
அதேபோல் மாநிலங்களவையில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “சிந்து தனது அற்புதமான ஆட்டத்தால், இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றை எழுதியுள்ளார்” என தெரிவித்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இருவரும் நாடாளுமன்ற அவைகளில் பாராட்டியுள்ளனர்.