2020 ம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு ஜூலை 23 ம் தேதி துவங்கி 8 ஆகஸ்ட் 2021 ல் நிறைவு பெற்றது.

உலகம் முழுக்க உள்ள விளையாட்டு ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டிகள் கடைசி நேரத்தில் பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக வீரர்கள் தங்கிய விளையாட்டு கிராமங்களில் அமைக்கப்பட்ட படுக்கையறைகளில் கூட ஒருவர் மட்டுமே படுக்கக் கூடிய கார்ட்போர்டாலான கட்டில்கள் அமைக்கப் பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

போட்டி ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே இந்தியாவின் பதக்கக் கனவை தன் தோள்களால் தூக்கி நிறுத்திய மீராபாய் சானு இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை கைப்பற்றினார்.

13 வயதே நிரம்பிய ஜப்பானின் ஸ்கேட்போர்டு வீராங்கனை மொமிஜி நிஷியா தங்கப் பதக்கம் வென்று ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

தன்னுடன் தங்கத்திற்கு மல்லுக்கட்டிய இத்தாலி வீரர் கிமார்க்கோ டேம்பேரி காயம் காரணமாக கடைசி சுற்றில் திணறிய போது, கத்தாரைச் சேர்ந்த வீரர் முதஸ் பார்ஷிம் போட்டி நடுவர்களிடம் பேசி, தங்கப் பதக்கத்தை இருவரும் பகிர்ந்துகொண்டது உயரம் தாண்டுதலில் மக்களின் உள்ளங்களைத் தொட்டார் என்றே சொல்லவேண்டும்.

சாலையில் சைக்கிள் ஓட்டும் போட்டியில் வெற்றிபெறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர்களின் கணக்கைப் பொய்யாக்கி முதலிடம் பிடித்தார் ஆஸ்திரிய நாட்டின் கணிதப் பேராசிரியர்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலியின் ஜேக்கப்ஸ் எவரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றார்.

தங்கப் பதக்கக் கனவில் இருந்த உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச்-சின் கனவு அரையிறுதிப் போட்டியில் கலைக்கப் பட்டது.

எதிர்பாராத வெற்றி தோல்விகள் ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் சர்ச்சைகளும் எழுந்தது.

பெலாரசைச் சேர்ந்த தடகள வீராங்கனையை போட்டியின் நடுவே வலுக்கட்டாயமாக நாட்டுக்கு திருப்பி அனுப்பமுயன்ற அந்நாட்டு பயிற்ச்சியாளர்கள் மீது ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய வீராங்கனை போலந்து நாட்டில் தஞ்சமடைந்தார்.

அதேபோல் குதிரையேற்றப் போட்டியில் சண்டித்தனம் செய்த குதிரையை அடித்த அதன் பயிற்சியாளரை தகுதி நீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் சங்கம்.

பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நடைபெற்ற போட்டியென்ற போதும், ஒலிம்பிக் போட்டிகளுக்கே உண்டான சுவாரசியமும், ஆர்வமும் குறையாமல் இருந்தது.

நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி, கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் மற்றும் தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே இரண்டாம் சுற்றுவரை முன்னேறிய வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி ஆகியோர் இந்தியாவின் பதக்கக் கனவை பாரிஸ் ஒலிம்பிக்கில் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்.