டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்2020 போட்டியில் இன்று நடைபெற்ற  குத்துச்சண்டையில்  இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

மகளிர் மிடில்வெயிட் பிரிவில் 75 கிலோ பிரிவில்  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்ஜீரியாவின் சயிப் இச்ரக்கை எதிர்கொண்டார் பூஜா ராணி. இதில் 5-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். இன்னும் ஒரு வெற்றியை பூஜா ராணி பெற்றுவிட்டால் ஒலிம்பிக் பதக்கத்தை உறுதி செய்து விடுவார்.

 வில்வித்தை விளையாட்டில் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். மகளிர் தனிநபர் பிரிவில் முதல் சுற்றில் பூட்டானைச் சேர்ந்த கர்மாவை எதிர்கொண்டார் தீபிகா குமாரி. இதில் 6-0 என எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அடுத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயது ஜெனிபருடன் மோதினார். தீபிகா குமாரிக்கு ஜெனிபர் கடும் சவாலாக விளங்கினார். இறுதியில் 6-4 என்கிற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபிகா குமாரி தகுதி பெற்றார். கடைசிக்கட்டத்தில் ஜெனிபர் 10 புள்ளிகள் எடுக்கவேண்டியபோது 9 புள்ளிகளை எடுத்ததால் நூலிழையில் வெற்றி பெற்றார் தீபிகா குமாரி.

அதே வேளையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், தனது 2-வது ஆட்டத்திலும் தோல்வியடைந்துள்ளார். ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டனில் குரூப் டி பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த 47-ம் நிலை வீரா் மிஷா ஷில்பர்மேனிடம் தோல்வியடைந்தார் 15-ம் நிலை வீரரான சாய் பிரணீத். அப்போதே அவர் போட்டியிலிருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டது. இன்று நடைபெற்ற  தனது கடைசி ஆட்டத்தில் நெதா்லாந்தின் 29-ஆம் நிலை வீரா் மாா்க் கால்ஜோவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 14-21, 14-21 என சாய் பிரணீத் தோல்வியடைந்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் ஒரு வெற்றியும் பெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளார்.