உலக வரைபடத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் நாளாக இன்று இருக்கலாம். ஆம்… ஈராக்கில் வாழும் குர்தூஸ் இன மக்கள், தங்களது தனி நாடு கோரிக்கைக்காக இன்று( செப்டம்பர் 25, திங்கள்) வாக்கெடுப்பில் கலந்துகொள்கிறார்கள்.
ஈராக்கின் ஒரு பகுதியாக இருக்கும் குர்திஸ்தான் பகுதி, கடந்த இருபது ஆண்டுகளாகவே தன்னாட்சிப் பிரதேசமாக நடைபோட்டு வருகிறது. பல காலமாகவே இவர்கள் தனி நாடு கேட்டு வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பலம் மிகுந்த ஈராக் ராணுவத்தை எதிர்த்து இவர்களால் நிற்க முடியவில்லை.
இந்த நிலையில்தான் ஈராக் அதிபராக இருந்த சதாம் ஹூசைன் குவைத் மீது படையெடுத்தார், அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஈராக் மீது படையெடுத்து சின்னாபின்னமாக்கின. சதாமும் தூக்கிலிடப்பட்டார்.
பிறகு, ஐ.நா. மேற்பார்வையின் கீழான சர்வதேச விமானப் படையினரின் ரோந்து காரணமாக, ஈராக் இராணுவம் கட்டுப்பட்டை இழந்தது. இந்த காலகட்டத்தில்தான் குர்திஸ்தான் பகுதி, தைரியமாக தன்னாட்சி பகுதியாக செயல்பட ஆரம்பித்தது.
அமெரிக்க இராணுவம் ஈராக் நாட்டிற்குள் புகுவதற்கான வாசலாக குர்திஸ்தான் இருந்தது. இதற்கு நன்றிக் கடனாக, அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்திலும், குர்திஷ் ஆயுதங்குழுக்கள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதி அளித்தது அமெரிக்கா. இந்த சூழலை பயன்படுத்தி, குர்திஸ்தான் பகுதி கிட்டதட்ட தனி நாடு போலவே செயல்பட ஆரம்பித்துவிட்டது.
தனிக்கொடி ஏற்றப்பட்டது. தனியான நிர்வாக அமைப்புகளும், அரசாங்கமும் உருவாக்கப்பட்டன. “குர்திஷ் தேசிய இராணுவம்” என்று வெளிப்படையான ராணுவமும் செயல்படத்துவங்கியது.
ஆனாலும் இதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆகவே வெளிவிவகார விசயங்களில் ஈராக்கின் முடிவுகளையே குர்திஸ்தான் ஏற்க வேண்டியிருந்தது.
தவிர ஈராக் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடக்கும் போது, குர்திஷ் பகுதிகளிலும் தேர்தல் நடக்கும். அப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் பாரளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொண்டு செயல்பட்டனர்.