டில்லி,
தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளனர்.
தலைநகர் டில்லி ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 39வது நாளை எட்டியுள்ளது.
இதுவரை மத்திய அரசு எந்தவித உறுதிமொழியும் அளிக்கவில்லை. அதுபோல பிரதமர் மோடியும் விவசாயிகளின் போராட்டம் குறித்து எந்தவித கருத்தும் கூறாமல் தான்தோன்றித்தனமாக இருந்து வருகிறார்.
தொடர்ந்து 39வது நாளாக அரை நிர்வாண நிலையில் போராடி வரும் தமிழக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அவர்களின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தலைவர் தனபால் தலைமையில் 100 விவசாயிகள் நேற்று டில்லிக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்களையும் சேர்த்து போராட்டத்தில் தற்போது 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய நிதி அமைச்ச கத்தின் கடிதம் 22ந்தேதிக்குள் பெற்று தருவதாக அளித்த உறுதிமொழியை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மவுன போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று மாலைக்குள் மத்திய நிதி அமைச்சகத்தில் ஒப்புதல் கடிதம் கிடைக்கா விட்டால் என்ன செய்வது? என்று நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கலந்து ஆலோசித்து முடிவு செய்தனர்.
இதுகுறித்து, போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது,
“விவசாயிகளான எங்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். எங்களது கோரிக்கைகளை கேட்க மறுக்கிறார். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகளா? இல்லை அடிமைகளா?
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்பேரில் நிதி அமைச்சகத்தில் இருந்து பதில் கடிதம் இன்று கிடைக்கப்பெற வேண்டும்.
இல்லாவிட்டால், காவிரியில் எங்களுக்கு தண்ணீர் கிடைக்காததை சுட்டிக்காட்டி மனித சிறுநீரை குடிக்கும் போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.
போராட்டக்குழுவினரின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.