சென்னை

இன்று நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளார்.

தற்போதைய திமுக ஆட்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் போது நிதி மேலாண்மை மோசமாக இருந்ததாகத் தொடர்ந்து குற்றம் சாட்டினர்.   இதையொட்டி தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் தெரிவித்தார். இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

எனவே கடந்த ஆட்சியின் போது இருந்த நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என் அறிவிக்கப்பட்டது.  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிடுவது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் பல்வேறு ஆய்வுக்கூட்டங்களை நடத்தினார். இன்று காலை 11.30 மணிக்கு தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையைத் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்கள் முன்னிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல தியாகராஜன் வெளியிடுகிறார்.

சுமார்120 பக்கங்கள் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களுக்காகச் செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன, கடன் விவரங்கள், சென்னை மெட்ரோ வாட்டர், மின்சார வாரியம், போக்குவரத்து, உள்ளாட்சி ஆகியவற்றில் வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது.

எனவே இந்த வெள்ளை அறிக்கை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட நிதிப் பின்னடைவுகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படும்.  ஆகவே நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கடுமையான விவாதங்களைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் உரையில் திமுக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைய உள்ள நிலையில், நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி இன்று வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.

கடந்த 2001ம் ஆண்டு  அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை இதற்கு முன்பு வெளியிட்டார். தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக இது அரசியலில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.