சென்னை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக விவசாயிகள் கட்சி தெரிவித்துள்ளது.

கர்நாடக பாஜக அரசு காவிரி நதியின் நடுவே மேகதாதுவில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளது.  இதனால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் தடுக்கப்பட்டு விவசாயிகளின் நீர் ஆதாரம் பாதிக்கப்படலாம் என்பதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   கர்நாடக அரசு இந்த அணை குடிநீருக்காக கட்டப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக, காங்கிரஸ், அதிமுக, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  அத்துடன் இந்த அணை கட்டுவதைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். கர்நாடக  பாஜக அரசு  மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து  தமிழக பாஜக தலைவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி உள்ளார்.

இந்நிலையில் தமிழக விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், “கர்நாடக பாஜக அரசு மேகதாது அணை கட்டுவதைக் கைவிடக்கோரி தஞ்சையில் தமிழக பாஜகவினர் உண்ணாவிரதம் இருந்தது இரட்டை வேடமாகும். இது விவசாயிகளை ஏமாற்றும் அப்பட்டமான நாடகம்.

பாஜவுக்கு இது கைவந்த கலை என்பது நாடறிந்த உண்மையாகும். மேகதாது அணையைக் கர்நாடகத்தில் கட்டியே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது பாஜக ஆட்சியாகும். அதற்கு ஆதரவும், ஒப்புதலும் அளித்து வருவது மத்திய பாஜக ஆட்சியாகும். ஆகவே அண்ணாமலை போராட வேண்டிய இடம் கர்நாடகம் அல்லது டெல்லி ஆகும்.” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.