பெங்களூரு

ன்னும் சற்று நேரத்தில் அதாவது 8 மணிக்குக் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

கடந்த 10 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்தது. இதற்காக  மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம்  73.19 சதவீத வாக்குகள் பதிவாகின.  இதில் அதிகபட்சமாக மேல்கோட்டையில் 91 சதவீதமும், குறைந்தபட்சமாகப் பெங்களூருவில் உள்ள பொம்மனஹள்ளியில் 47.36 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாயச் சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

தேர்தலில் வாக்குகள் பதிவான 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 34 மண்டல மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

முன்னிலை விவரங்கள் காலை 10 மணி முதல் வெளியாகி, 12 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்..  இந்த சூழலில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை காங்கிரஸுக்குச் சாதகமாக வந்துள்ளன.