சென்னை

இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் நடை பெறுகிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஆரம்பமாகும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டத்தில் சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். காலை 8 மணி முதல் அனைவருக்கும் ‘இலவச மருத்துவ பரிசோதனை, இலவச கண் பரிசோதனை’ நடத்தப்படுகிறது.

இந்த கூட்டம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

கூட்டத்தில் சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர் சங்க முடிவு, நடிகர் சங்கக் கட்டிட விவகாரம், நட்சத்திர கலைவிழா நடத்தி நிதிதிரட்டுதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

கூட்டத்தில் நடிகர் டெல்லி கணேஷ், சி.ஆர். விஜயகுமாரி இருவருக்கும் கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி, எம்.ஆர்.சோலைவள்ளி, எம்.காமராஜ், பிரசாத் வி.சி. ராஜேந்திரன், எம். ஏ.பிரகாஷ் ஆகிய பத்து பேருக்கு நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படுகிறது.