டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்றுமுதல் மீண்டும் தொடங்குகிறது. இன்றைய முதல் ஆட்டம், கொல்கத்தா பெங்களூரு அணிகள் இடையே நடைபெறுகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, இந்திய எடுத்த அதிரடி ராணுவ நடவடிக்கை இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை உருவாக்கியது. இதனால், பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டதுடன், உயர்தர பாதுகாப்பு நாடு முழுவதும் போடப்பட்டது. இதன் காரணமாக, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இதையடுத்து, நடப்பாண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகளிலும் உடனடியாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது.
10 புள்ளி 1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, மீண்டும் ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
ஐபிஎல் 2025ன் 58வது லீக் போட்டி, இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.
நாளை 59வது லீக் போட்டி, ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே மாலை 3.30 மணி அளவில் தொடங்குகிறது.. 60வது லீக் போட்டி, டெல்லியில் டெல்லி கேபிடல் குஜராத் டைட்டன்ஸ் இடையேயும் இரவு 7.30 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது.