சென்னை
இன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் சார்பாக மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “இன்று வெப்ப சலனத்தின் காரணமாகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இன்னும் 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இங்கு அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகம், ஹாரிசன் எஸ்டேட்டில் தலா 3 சென்டி மீட்டரும், கோவை மாவட்டம் சின்கோனா, அவலாஞ்சி, சின்னக்கல்லார், சோலையார், தேவலா, மேல் பவானியில் தலா 1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் இன்று முதல் 23ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.” எனக் கூறப்பட்டுள்ளது.