டில்லி

ன்று மத்திய அரசின் நல்லாசிரியர் விருதை 75 பேருக்குக் குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ‘ஆசிரியர் தின விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நாளில், சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகள், சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.

இந்த ஆண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது உயர் கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதில் தமிழகத்தில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். விருது பெறுவோருக்குச் சான்றிதழ், ரூ.50,000 ரொக்கம், மற்றும் வெள்ளிப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.