சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று, அத்தொகையினை ஆன்லைன் 18.11.2024 அன்று பிற்பகல் முதல் 10.12.2024 மாலை 5.00 மணி வரையிலான நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
2024- 2025ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மற்றும் டிஎம்எல் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024- 2025ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து (தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து) தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று, அத்தொகையினை ஆன்லைன் 18.11.2024 அன்று பிற்பகல் முதல் 10.12.2024 மாலை 5.00 மணி வரையிலான நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டண விலக்கிற்கு தகுதியானோர்:
தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வெழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி தவிர இதர பயிற்று மொழிகளில் (Other than Tamil Medium) பயிலும் பின்வரும் பிரிவுகளைச் சார்ந்த மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
SC/ SCA/ ST மற்றும் எஸ்சி Converts (SS) – பெற்றோருக்கான வருமானத்திற்கு உச்ச வரம்பு எதும் இல்லை.
அதேபோல MBC/ DC பிரிவினருக்கான வருமானத்திற்கு உச்ச வரம்பு எதும் இல்லை.
பி.சி/ பி.சி.எம். பிரிவு – பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு (ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு) மிகாமல் இருப்பவர்களுக்கு மட்டும்
அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் பார்வை குறைபாடுடைய மற்றும் செவித்திறன் / பேச்சுத் திறன் குறைபாடுடைய மாணவர்கள்.
சுயநிதி/ மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகள்
சுயநிதி, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு / பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு டபபெறத் தகுதியுடையவர்கள் அல்லர்.
11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்துதல்
பள்ளித் தலைமையாசிரியர்கள், தங்கள் பள்ளியில் +2 பயிலும் பள்ளிமாணவர்கள், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வினை (+1 Arrear Subjects) தற்போது எழுதுவதற்கான தேர்வுக் கட்டணத் தொகையினை சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து பெற்று, அத்தொகையினை 20.11.2024 அன்று
பிற்பகல் முதல் 10.12.2024 மாலை 5.00 மணி வரையிலான நாட்களில் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்திற்குச் சென்று, ஆன்லைன் வழியாக செலுத்துதல் வேண்டும்.
அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் கட்டணம் (TML Fees)
2024-2025- ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வின் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்வதற்காக, அனைத்துப் பள்ளிகளும் (எந்த ஒரு பள்ளியும் விலக்கு இல்லாமல்) ரூ.300/- செலுத்தவேண்டும்.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.