டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மார்ச் 31ம் தேதியான இன்றே இறுதி நாளாகும்.
தனிமனித அடையாள ஆவணமான ஆதார் கார்டுகள் அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் கார்டுகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான கால அவகாசமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு ஜூனில் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் கால அவகாசம் 2021ம் ஆண்டு மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு இந்த முறை நீட்டிக்காமல் மார்ச் 31ம் தேதியான இன்றைக்குள் இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
தற்போதைய வருமான வரிச் சட்டத்தின்படி ஆதார் கார்டுடன் பான் எண் இணைக்கப்படாவிட்டால் அந்த பான் கார்டு செயலிழந்ததாக அறிவிக்கப்படும். மேலும், செயலிழந்த பான் கார்டுகளை 2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு மேல் பயன்படுத்த முடியாது.
பான் கார்டு விவரங்களை வழங்காவிட்டால் வருமான வரிச் சட்டத்தின்படி ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். புதிய நிதி மசோதாவின் படி, பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களிடம் குறைந்தது 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.